ஹிரோஷிமாவில் உள்ள 1,400 ஆண்டுகள் பழமையான கோவிலை சுற்றிப்பார்த்த ஜி-7 நாடுகளின் தலைவர்கள்
|இட்சுகுஷிமா தீவில் உள்ள 1,400 ஆண்டுகள் பழமையான மியாஜிமா கோவிலை ஜி-7 நாடுகளின் தலைவர்கள் சுற்றிப்பார்த்தனர்.
ஹிரோஷிமா,
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் அமைப்பான 'ஜி-7 ' அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு மே 19-ந் தேதி (நேற்று) தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டை ஜப்பான் நடத்துகிறது. இந்த மாநாடு நேற்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் உலகத் தலைவர்களாக வலம் வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேனுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்சேல் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ஜி-7 நாடுகளின் தலைவர்கள், ஹிரோஷிமாவின் இட்சுகுஷிமா தீவில் உள்ள 1,400 ஆண்டுகள் பழமையான மியாஜிமா கோவிலை சுற்றிப்பார்த்தனர். அங்குள்ள பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க ஜி-7 தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலின் வரலாறு குறித்து அறிந்து கொண்ட அவர்கள், ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.