< Back
உலக செய்திகள்
ஜி-20 உச்சி மாநாடு வெற்றி; உலக நாடுகள் எங்களை ஒதுக்கி விட்டன:  பாகிஸ்தானியர்கள் வேதனை
உலக செய்திகள்

ஜி-20 உச்சி மாநாடு வெற்றி; உலக நாடுகள் எங்களை ஒதுக்கி விட்டன: பாகிஸ்தானியர்கள் வேதனை

தினத்தந்தி
|
14 Sept 2023 11:40 AM IST

டெல்லியில் நடந்த ஜி-20 உச்சி மாநாடு வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தானியர்கள் சிலர் இந்தியாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

லாகூர்,

டெல்லியின் பாரத் மண்டபத்தில் கடந்த 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர் பற்றிய தீர்மானம் நிறைவேறியது.

இதில், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான கப்பல் மற்றும் ரெயில் இணைப்புக்கான, ஒரு பெரிய வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற வரலாற்று ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதனை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்தன.

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கான இந்த திட்ட தொடக்கம் என்பது, இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக நடந்துள்ள மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டம் ஆகும்.

இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியன் ஜி-20 உறுப்பு நாடுகளில் ஒன்றாக இணைந்தது என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாடு வெற்றி பெற்றது பற்றி உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த ஜி-20 உச்சி மாநாடு வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தானியர்கள் சிலர் இந்தியாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி ஒருவர் கூறும்போது, டாப் 20 நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அது அந்த நாட்டுக்கு ஒரு கவுரவம் அளிக்க கூடிய விசயம். அதனால், இந்திய பொருளாதாரத்திற்கு நிறைய பலன்கள் கிடைக்க பெறும் என கூறியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு பாகிஸ்தானியர் கூறும்போது, சவுதி அரேபியாவின் ஆட்சியாளர் இந்தியாவுக்கு சென்றார். அவர் பாகிஸ்தானுக்கும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வரவில்லை.

இதுபோன்ற பெரிய மாநாடு நடைபெறும்போது, அந்த நாடு முன்னேறி செல்கிறது என மக்கள் பார்க்கின்றனர் என கூறியுள்ளார்.

பாகிஸ்தானியர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, எங்களுடைய வெளியுறவு கொள்கையில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். அதனாலேயே, எங்களுடைய அண்டை நாட்டில் ஜி-20 உச்சி மாநாடு நடந்துள்ளது. நாடுகளின் தலைவர்கள் வருகை தந்தனர்.

கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் எங்களுடைய பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை வீழ்ச்சியடைந்து உள்ளது. உலக நாடுகள் எங்களை ஒதுக்கி விட்டன என கூறியுள்ளார்.

ஜி-20 உச்சி மாநாடு பற்றி மற்றொரு பாகிஸ்தானியர் கூறும்போது, எங்களுடைய பொருளாதாரம் பாதுகாக்கப்படுவதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, டாப் 20 நாடுகளை அழைத்து இந்தியா விருந்தளித்து கொண்டிருக்கிறது.

இந்தியா ஒரு நல்ல நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியர்களுக்கு இது ஒரு பெருமைக்குரிய தருணம்.

இந்தியாவில் இருந்து வர கூடிய புகைப்படங்கள், உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படங்கள் என, உலகத்திற்கு இந்தியாவை பற்றிய ஒரு நேர்மறையான தோற்றம் ஏற்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டனர்.

சவுதி அரேபிய இளவரசர் பாகிஸ்தானுக்கு வரவில்லை. ஆனால், இந்தியாவுக்கு சென்று விட்டார்.

உலகத்திற்கு இந்தியா எவ்வளவு முக்கியம் என காட்டப்பட்டு உள்ளது. வங்காளதேசத்திற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. ஆனால் பாகிஸ்தானை அழைக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்