உலக செய்திகள்
ஹமாஸ் விடுவித்த 2 அமெரிக்கர்களுக்கும் முழு ஆதரவு; அதிபர் பைடன் உறுதி
உலக செய்திகள்

ஹமாஸ் விடுவித்த 2 அமெரிக்கர்களுக்கும் முழு ஆதரவு; அதிபர் பைடன் உறுதி

தினத்தந்தி
|
21 Oct 2023 7:38 AM IST

ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 அமெரிக்கர்களும் நலம்பெற முழு ஆதரவு வழங்கப்படும் என அதிபர் பைடன் உறுதி கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன், பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

இதுவரை 200 பேரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதிகளாக சிறை பிடித்து வைத்துள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறுகிறது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றவர்களில் அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த 2 பெண்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மனிதநேய காரணங்களுக்காக அவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்கள் ஜுடித் தை ரானன் மற்றும் அவருடைய 17 வயது மகள், நடாலி ரானன் என தெரிய வந்துள்ளது.

இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் பைடன் வெளியிட்ட செய்தியில், ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 அமெரிக்கர்களுடனும் நான் பேசியுள்ளேன்.

அவர்கள் இருவரும் குணமடையவும் மற்றும் நலம்பெறவும் அமெரிக்க அரசு முழு அளவில் ஆதரவளிக்கும் என அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டு உள்ளார்.

அமெரிக்கர்களின் அனைத்து குடும்பத்தினரையும் ஜில் மற்றும் நான் என இருவரும் எங்களுடைய மனதில் மிக நெருக்கத்தில் வைத்திருக்கிறோம் என பைடன் தெரிவித்து உள்ளார்.

ஹமாஸ் பிடியில் இருந்து 2 அமெரிக்கர்களும் விடுவிக்கப்பட்ட சூழலில், பைடன் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அவர்கள் இருவரும் இஸ்ரேல் படைகளின் வசம் உள்ளனர் என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்