அட்லாண்டிக் பெருங்கடலில் அதிசயம் கவிழ்ந்த படகில் 16 மணி நேரம் சிக்கியும் உயிர் தப்பிய மாலுமி
|லிஸ்பனில் இருந்து கடந்த திங்கட்கிழமை இரவு புறப்பட்ட ஒரு படகு, அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை மாற்றத்தால் கவிழ்ந்து விட்டது.
லிஸ்பன்,
போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர்லிஸ்பனில் இருந்து கடந்த திங்கட்கிழமை இரவு புறப்பட்ட ஒரு படகு, அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை மாற்றத்தால் கவிழ்ந்து விட்டது.அந்த படகில் இருந்து பேரழிவு சமிக்ஞை அனுப்பப்பட்டது. அந்த சமிக்ஞை ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள காலிசியா பகுதியில் இருந்து சென்றது.
அந்த சமிக்ஞை கிடைத்ததைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டின் கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று கவிழ்ந்த அந்தப் படகைத் தேடிக் கண்டுபிடித்தனர். ஆனால் அந்த படகில் இருந்த மாலுமியை அருகில் சென்று மீட்டு காப்பாற்றுவதற்கு தடையாக கடல் சீற்றம் அமைந்தது. எனவே அவர்கள் மாலுமியை மறுநாள்காலை வரை காத்திருக்க வைக்க வேண்டியதாயிற்று.
மறுநாள் காலையில் 5 ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுக்க 5 நீர்மூழ்கி வீரர்களுடன் மீட்பு கப்பல் சென்று அந்தப் படகின் மாலுமியை உயிருடன் மீட்டனர். இதில் என்ன அதிசயம் என்றால், அவர் படகுக்குள் காற்று குமிழியை பயன்படுத்தி 16 மணி நேரம் உயிர் பிழைத்ததுதான். இப்படிப்பட்ட நிலையில் மனிதன் உயிர்பிழைப்பது சாத்தியமற்ற நிலை, அதிசயமானது என சொல்லப்படுகிறது.
மீட்கப்பட்ட மாலுமி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். வயது 62. இவரை மீட்டது குறித்து ஸ்பெயின் நாட்டின் கடலோர பாதுகாப்பு மற்றும் மீட்பு அமைப்பு கூறும்போது, "காப்பாற்றப்படும் ஒவ்வொரு உயிரும் எங்களின் மிகப்பெரிய வெகுமதி ஆகும்" என தெரிவித்தது.
மீட்கப்பட்ட மாலுமி, மருத்துவ பரிசோதனைகளுக்காக ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.