பிரான்ஸ்: வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை - மாணவனின் திகில் வாக்குமூலத்தால் பரபரப்பு
|கொலை செய்த மாணவன் போலிசாரிடம் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாரிஸ்,
தென்மேற்கு பிரான்சில் உள்ள செயிண்ட் ஜீன்-டி-லுஸ் என்ற கடற்கரை நகரில் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றி வந்த 50 வயதான ஆசிரியை ஆக்னஸ் லாஸ்லே, சம்பவத்தன்று வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்ததாகவும், அவரை 16 வயது மாணவன் ஒருவன் திடீரென கத்தியால் குத்திவிட்டு வகுப்பை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த ஆசிரியை ஆக்னஸ் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார். ஆனால் அந்த மாணவன் எவ்வித சலனமும் இன்றி பக்கத்து வகுப்பறையில் இருந்த ஆசிரியரிடம் சென்று நடந்ததைக் கூறி கத்தியை ஒப்படைத்துள்ளான். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை கைது செய்துள்ளனர்.
அந்த மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அந்த பேய் தான் தன்னை ஆசிரியை ஆக்னஸை குத்தி கொலை செய்யச் சொன்னதாகவும் கூறியுள்ளான். மாணவனின் வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பிரான்சில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.