< Back
உலக செய்திகள்
ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது - ரத்தன் டாடா மறைவுக்கு இம்மானுவேல் மேக்ரான் இரங்கல்
உலக செய்திகள்

'ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது' - ரத்தன் டாடா மறைவுக்கு இம்மானுவேல் மேக்ரான் இரங்கல்

தினத்தந்தி
|
11 Oct 2024 3:29 AM IST

ரத்தன் டாடாவின் மறைவால் ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது என இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பாரிஸ்,

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. ரத்தன் டாடாவின் உடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ரத்தன் டாடாவின் மறைவால் ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது. இந்தியா மற்றும் பிரான்சில், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வையால் தொழில்கள் மேம்பட்டன. அதையும் தாண்டி, அவரது மனிதநேய பார்வை, மகத்தான தொண்டு மற்றும் அவரது பணிவு ஆகியவற்றால் ரத்தன் டாடா நினைவுகூறப்படுவார். அவருக்கு நெருக்கமானவர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்