மேற்கு கரையில் கிராமத்தில் புகுந்து இஸ்ரேல் படை தாக்குதல்.. 4 பேர் உயிரிழப்பு
|தாக்குதல் வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் காரில் தப்பிச் செல்ல முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்கு கரையிலும் வன்முறை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள், குடியேறிகளின் வன்முறை மற்றும் தெரு தாக்குதல்கள் காரணமாக அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், மேற்கு கரையின் கபர் நிமா கிராமத்தில் இஸ்ரேல் படை நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தியது. அந்த கிராமத்தின் அருகே முதலில் ஒரு கார் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பின்னர் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. இதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கார் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இஸ்ரேல் படைகள் கிராமத்தை தாக்கியதால் பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக சுகாதாரத்துறையின் தகவலை மேற்கோள் காட்டி அர் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் எல்லை போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், முந்தைய நாளில் நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பாதுகாப்பு படைகள் சென்றதாகவும், அப்போது சந்தேக நபர்கள் 4 பேரும் காரில் தப்பிச் செல்ல முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் காரை ஏற்ற முயன்றதாகவும் இஸ்ரேல் எல்லை போலீஸ் தெரிவித்துள்ளது.