அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது
|கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நாளுக்கு நாள் சட்டவிரோதமாக நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேரை எல்லை பாதுகாப்பில் இருந்த போலீசார் கைது செய்துள்ளனர்.
பபலோ நகரில் உள்ள சர்வதேச ரெயில் பாலத்தில் ஓடும் சரக்கு ரெயிலில் இருந்து ஒரு பெண் உள்பட 4 பேர் குதித்ததை சிசிடிவி மூலம் பார்த்த, அமெரிக்க எல்லையில் இருந்த போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு காயத்துடன் ஒரு பெண் மட்டும் இருந்த நிலையில் மற்றவர்கள் தப்பி சென்றனர். தொடர்ந்து தப்பி சென்றவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்னர் அனைவரையும் போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் உள்பட 3 பேர் இந்தியர்கள் என்பதும் மற்றொருவர் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் எந்த குடியுரிமை ஆவணங்களும் இல்லாததால் அவர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதும் தெரியவந்தது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.