குடும்பத்துடன் துபாய் சென்றார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே..!!
|இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது குடும்பத்துடன் துபாய் புறப்பட்டு சென்றார்.
கொழும்பு,
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வலுத்து வன்முறையாக உருவெடுத்ததால் அதிபர் கோத்தபய சொந்த நாட்டைவிட்டு தப்பிச் சென்றதுடன் பதவி விலக நேரிட்டது.
மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்த அவர், மக்களின் போராட்டம் ஓய்ந்தபிறகு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் நாடு திரும்பினார். தாய்லாந்து அவருக்கு நீண்டகாலம் தங்க அடைக்கலம் கொடுத்தாலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்ற தடை விதித்ததுடன், பாதுகாப்புக்கு காவலர்களையும் நியமித்து இருந்தது. செப்டம்பர் மாதம் மீண்டும் இலங்கை திரும்பிய அவருக்கு முன்னாள் அதிபருக்கான சிறப்பு பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் அவர் நாடு திரும்பிய பின்பு, முதல்முறையாக வெளிநாடு பயணமாக நேற்று தனது குடும்பத்தினருடன் துபாய்க்கு புறப்பட்டு சென்றார். அவர் அங்கு எவ்வளவு காலம் தங்குவார் என்பது பற்றி எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.