பாகிஸ்தானில் மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக் கொலை!
|பலுசிஸ்தான் மாகாணத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பலுசிஸ்தானில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி முஹம்மது நூர் மெஸ்கன்சாய் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முன்னாள் நீதிபதி முஹம்மது நூர் மெஸ்கன்சாய், அந்நாட்டின் நீதித்துறையில் தைரியமான நீதிபதி என்று போற்றப்படுபவர்.ஷரியாவுக்கு எதிராக ரிபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை வழங்கியவர்.
பலுசிஸ்தான் முதல்-மந்திரி மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ முன்னாள் நீதிபதி மெஸ்கன்சாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது கோழைத்தனமான நடவடிக்கை என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதச் சம்பவங்கள் செப்டம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளன என்று 'சண்டை மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் பாகிஸ்தான் நிறுவனம்' தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதத்தில் தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.