75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமான சேவை தொடர்ந்து பாதிப்பு
|துபாயில் கனமழை, வெள்ளம் எதிரொலியாக, பள்ளிகள் நாளை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற நாளை வரை அனுமதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.
துபாய்,
துபாயில் வரலாறு காணாத கனமழை பெய்து உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்பட்டு உள்ளது. வீடுகள், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விமான சேவையும் பாதிப்படைந்தது.
வாகனங்கள் வழியிலேயே நீரில் மூழ்கின. கார், லாரி உள்ளிட்ட சிறிய பெரிய வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளும் வீடியோவாக வெளிவந்தன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 1949-ம் ஆண்டுக்கு பின்பு, அதிக அளவில் கனமழை பொழிந்துள்ளது என பதிவாகி உள்ளது. இந்நிலையில், சர்வதேச போக்குவரத்து அதிகம் நடைபெற கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. விமான சேவை ரத்து, காலதாமதம் என பயணிகள் அதிக இடையூறுகளை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், விமான நிலையத்தின் முனையம் 1-ல் விமான சேவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எனினும், விமானங்கள் தொடர்ந்து காலதாமதத்துடன் வந்து சேர்கின்றன. இதேபோன்று, சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன.
இதனால், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் விமான நிலைய முனையம் 1-ற்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெள்ளம் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து பள்ளிகளும் நாளை (19-ந்தேதி) வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் அனைத்து அரசு பள்ளிகளும் மூடப்படுகின்றன.
அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான கால அளவையும் நாளை வரை அரசு நீட்டித்துள்ளது.
இதற்கான முடிவானது, மந்திரிகள் கவுன்சிலில் எடுக்கப்பட்டு உள்ளது. இண்டிகோ நிறுவனம் இன்று நண்பகல் 12 மணி வரை துபாய்க்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது. துபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 2 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோன்று, துபாயில் உள்ள துபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. துபாயின் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்திருந்தது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின. பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியே நீர் உள்ளே புகுந்தது.
துபாய் மட்டுமின்றி பஹ்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு இதுவரை 20 பேர் வரை பலியாகி உள்ளனர். தொடர்ந்து சில நாட்களுக்கு ஓமனின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மித முதல் கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், விமான சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளதுடன், பள்ளிகள் நாளை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற நாளை வரை அனுமதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.