< Back
உலக செய்திகள்
காதலுக்காக... தினமும் 320 கி.மீ. பயணிக்கும் சீனர்
உலக செய்திகள்

காதலுக்காக... தினமும் 320 கி.மீ. பயணிக்கும் சீனர்

தினத்தந்தி
|
20 July 2024 12:23 PM IST

சீனாவில் புதிதாக திருமணம் செய்து கொண்ட லின், மனைவி மீது கொண்ட காதலுக்காக நீண்ட தொலைவு பயணம் செய்து வேலைக்கு செல்கிறார்.

ஷான்டாங்,

சீனாவின் கிழக்கே ஷான்டாங் மாகாணத்தில் வெய்பாங் நகரில் வசித்து வருபவர் லின் ஷு (வயது 31). 7 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். கடந்த மே மாதம் இந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது. காதலி, மனைவியான பின்னும் அவர் மீது லின் கொண்ட காதல் குறையவில்லை.

அவருக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்து வருகிறார். திருமணத்திற்கு முன்பு, வாடகைக்கு தங்கியிருந்த இடத்தில் இருந்து ஒரு மணிநேரத்தில் வேலை செய்யும் இடத்திற்கு லின் சென்று சேர்ந்து விடுவார். ஆனால், மனைவி வந்ததும் அவருடன் அதிக நேரம் செலவிட விரும்பியுள்ளார்.

லின்னின் மனைவிக்கு, சொந்த ஊர் வெய்பாங் நகரில் உள்ளது. அதனால், அந்த ஊரிலேயே வசிப்பது பாதுகாப்பானது என அவர் உணர்ந்திருக்கிறார். இதனை புரிந்து கொண்ட லின்னும், அன்பு மனைவிக்காக அந்த ஊரிலேயே பிளாட் ஒன்றில் குடியேறியுள்ளார்.

அவர் வசிக்கும் பிளாட்டுக்கும், அலுவலகத்திற்கும் இடையே 160 கி.மீ. தொலைவு உள்ளது. இதனால், வேலைக்கு சென்று, திரும்ப அவர் தினமும் 320 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதுபற்றி அந்நாட்டின் சமூக ஊடகத்தில் ஒன்றான டாயினில் பல்வேறு வீடியோக்களை அவர் வெளியிட்டு உள்ளார்.

இதன்படி, தினமும் அதிகாலை 5 மணிக்கு அவர் எழுந்திருக்கிறார். வெய்பாங்கில் உள்ள வீட்டில் இருந்து காலை 5.20 மணியளவில் புறப்படுகிறார். மின்சார பைக்கில் 30 நிமிட நேரம் பயணித்து ரெயில் நிலையம் சென்றடைகிறார்.

இதன்பின்னர், காலை 6.15 மணியளவில் ரெயிலில் ஏறும் அவர், குயிங்டாவோ நகருக்கு காலை 7.46 மணியளவில் சென்று சேர்கிறார். ரெயிலில் இருந்து இறங்கி 15 நிமிடம் நடந்து அலுவலகம் சென்று சேர்கிறார்.

அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள கேண்டீனில் காலை சிற்றுண்டியை எடுத்து கொள்கிறார். அதன்பின்னர், காலை 9 மணிக்கு அவருடைய வேலையை தொடங்குகிறார். பணி முடிந்ததும், 3 முதல் 4 மணிநேரம் பயணம் செய்து வீட்டை அடைகிறார்.

அவருடைய இந்த நீண்ட தொலைவு பயணம் பற்றி அறிந்ததும், பயணத்திற்காக இவ்வளவு நேரம் செலவிடுகிறாரா? என சமூக ஊடக பயனாளர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், புதிதாக திருமணம் முடித்த லின்னோ, எல்லாம் மனைவி மீது கொண்ட காதலுக்காக என கூறுகிறார்.

தொடர்ந்து அவர், மனைவியுடன் அதிக நேரம் செலவிட விரும்பினேன். இந்த நீண்ட பயணம் சலிப்பூட்டவில்லை. போக்குவரத்து வசதியும் உதவியாக இருக்கிறது என அதற்காக லின் நன்றி தெரிவித்து கொண்டார். இவருடைய நிலைமையை அறிந்து, லின்னின் மேலாளரும் அவரை கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை.

எனினும், இது ஒரு தற்காலிக பயணம் என கூறும் லின், குயிங்டாவோவில் அவருடைய மனைவி வேலை தேடி வருகிறார் என்றும் வேலை கிடைத்ததும் அந்நகரிலேயே வசிக்க திட்டமிட்டு உள்ளோம் என்றும் தெரிவிக்கிறார். இந்த வீடியோவை 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதுடன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்