< Back
உலக செய்திகள்
புளோரிடா மாகாணத்தை பந்தாடிய மில்டன் புயல்: 9 பேர் பலி
உலக செய்திகள்

புளோரிடா மாகாணத்தை பந்தாடிய மில்டன் புயல்: 9 பேர் பலி

தினத்தந்தி
|
11 Oct 2024 12:41 AM IST

மில்லடன் புயலால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் ஹெலென் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழைக்கு அங்கு சுமார் 230 பேர் பலியாகினர். 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் அங்கு புதிய புயல் உருவானது. மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் புளோரிடா மாகாணம் தம்பா பகுதியில் நேற்று கரையை கடந்தது

அப்போது மணிக்கு சுமார் 260 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.



மேலும் இந்த புயலால் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ராட்சத கிரேன் கவிழ்ந்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன. மில்டன் புயல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புளோரிடா மாகாணத்தை மில்டன் புயல் பந்தாடி உள்ளது.



அதேபோல் புயல் காற்று வீசியபோது ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சரிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் பேர் இருளில் சிக்கி தவித்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. இதனையடுத்து வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். இதற்காக அங்கு ஏராளமான தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கி உள்ளது.

அதிபர் பைடன் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

புயலால் பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக,இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அறுந்து விழுந்த மின்கம்பிகள், குப்பைகள், சாலைகள் துர்நாற்றம் ஆகியவை ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகின்றன. மீட்பு படையினர் உதவி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்