இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
|வீடுகள், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், 70 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு தப்பி சென்றனர்.
ஜகர்த்தா,
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை கடுமையாக கனமழை பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்ததில், பல பகுதிகளில் வெள்ளமும், நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது என அந்நாட்டின் தேசிய பேரிடர் தணிப்பு கழகம் அறிவித்து உள்ளது.
வெள்ளம் எதிரொலியாக, 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள், 50-க்கும் கூடுதலான வழிபாட்டு தலங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிப்படைந்தன. கனமழையால் வெள்ளம் பல்வேறு இடங்களிலும் புகுந்தது. வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் சூழ்ந்து கொண்டது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் மொத்தமுள்ள 12 ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 பகுதிகளில் பேரிடருக்கான நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.
வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், 70 ஆயிரத்திற்கும் கூடுதலான பொதுமக்கள் வீடுகளை விட்டு விட்டு, பாதுகாப்பான வேறு பகுதிகளுக்கு தப்பி சென்றனர். மீட்பு பணியினரும் தொடர்ந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வெள்ளம் வடிந்த பின்னரே, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளது என்பன போன்ற விவரங்கள் தெரிய வரும்.