நிலவில் தரையிறங்க உள்ள முதல் தனியார் விண்கலம்
|நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கி.மீ. உயரத்தில் ‘ஹகுடோ-ஆர்’ விண்கலம் நிலவை சுற்றி வருகிறது.
டோக்கியோ,
ஜப்பானைச் சேர்ந்த 'ஐஸ்பேஸ்'(ispace) என்ற தனியார் நிறுவனம் 'ஹகுடோ-ஆர் மிஷன் 1' என்ற திட்டத்தின் மூலம் நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்பு நிலவில் தனியார் விண்கலங்கள் எதுவும் தரையிறங்கியது இல்லை. அந்த வகையில் இதுவே நிலவில் தரையிறங்கப் போகும் முதல் தனியார் விண்கலம் என்ற சாதனையை படைக்க உள்ளது.
'ஹகுடோ-ஆர்' விண்கலம் கடந்த டிசம்பர் மாதம் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'ஃபால்கான் 9' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இது கடந்த மாதம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இந்த விண்கலத்தில் ஐக்கிய அமீரகத்தின் 'ரஷீத்'ரோவர் உள்ளது. இந்த ரோவர் நிலவில் தரையிறங்கி ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
தற்போது நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கி.மீ. உயரத்தில் 'ஹகுடோ-ஆர்' விண்கலம் நிலவை சுற்றி வருகிறது. இன்று இரவு 10 மணியளவில் 'ரஷீத்'ரோவர் நிலவில் தரையிறங்க உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'ஐஸ்பேஸ்' நிறுவனம், நிலவுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.