அமீரகத்தின் முதல் நிலவு பயணமாக ராஷித் ரோவர் வாகனம் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது - துபாய் விண்வெளி மையம்
|அமீரகத்தின் முதல் நிலவு பயணமாக ராஷித் ரோவர் வாகனம் வருகிற 28-ந் தேதி அமெரிக்காவின் கேப் கார்னிவெல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
இது குறித்து நேற்று துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-.
ராஷித் ரோவர் வாகனம்
அமீரகத்தின் ராஷித் ரோவர் வாகனம் ஜப்பான் நாட்டின் ஹக்குட்டோ-ஆர் என்ற லேண்டர் விண்கலத்தில் வைத்து அனுப்பப்பட உள்ளது. தற்போது இந்த ராஷித் ரோவர் மற்றும் லேண்டர் விண்கலம் ஆகியவை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேப் கார்னிவெல் பகுதியில் உள்ள ஏவுதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புளோரிடாவில் உள்ள கேப் கார்னிவெல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலமாக நிலவை நோக்கி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு வருகிற 22-ந் தேதி அல்லது அதற்கு பின்னால் திட்டமிடப்பட்டு இருந்தது.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இதில் அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசா பூமியின் சுழற்சியை வைத்து ராக்கெட்டை ஏவுவதற்கு சரியான கோணத்தை கணித்து அதற்கான நாள் மற்றும் நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி அட்லஸ் உலக வரைபடத்தில் கேப் கார்னிவெல் பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளமானது 47.5 டிகிரி வடக்கு மற்றும் 44.4 டிகிரி கிழக்கில் அமைந்துள்ளது.
இதனை வைத்து விண்கலம் நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்க வேண்டுமானால் வருகிற 28-ந் தேதி அமெரிக்க நேரப்பட அதிகாலை 3.46 (அமீரக நேரப்படி மதியம் 12.46) மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வேண்டும் என நாசா அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வருகிற 28-ந் தேதி ராஷித் ரோவர் வாகனம் விண்ணில் ஏவப்பட உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பு
இதில் அடுத்த கட்டமான விண்ணில் ஏவப்படும் 28-ந் தேதி காற்றின் வேகம், வானில் இடி, மின்னல், மழை போன்ற இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டால் ராக்கெட் ஏவப்படுவது சற்று தள்ளி வைக்கப்படலாம். அமெரிக்காவின் ஆர்டெமிஸ் 1 நிலவு பயண திட்டத்தில் ஏற்கனவே சோதனை முறையில் விண்கலம் நிலவை நோக்கி சென்று கொண்டு இருக்கும்போது அமீரகத்தின் முதல் நிலவு பயணம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஹக்குட்டோ-ஆர் லேண்டர் விண்கலம் குறைந்த எரிசக்தி பாதையில் நிலவை நோக்கி பயணம் செய்ய உள்ளதால் விண்ணில் ஏவப்பட்டு 5 மாதங்களில் நிலவின் மேற்பரப்பை அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.