< Back
உலக செய்திகள்
கொரோனாவால் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் சீனா திரும்ப நடவடிக்கை..!!

கோப்புப்படம்

உலக செய்திகள்

கொரோனாவால் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் சீனா திரும்ப நடவடிக்கை..!!

தினத்தந்தி
|
10 Aug 2022 2:47 AM IST

கொரோனா காரணமாக நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் மீண்டும் சீனா திரும்புவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாக சீனா அறிவித்து உள்ளது.

பீஜிங்,

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு பல்வேறு கல்லூரிகளில் பயின்று வந்த 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பி இருந்தனர். ஆனால் 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர்கள் சீனா சென்று தங்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த மாணவர்களை மீண்டும் அனுமதிக்குமாறு சீனாவை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் தாமதமாகி வந்தன.

அதேநேரம் ரஷியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளின் மாணவர்கள் கடந்த சில நாட்களாக சீனா சென்று வருகின்றனர்.

விரைவில் முதல் குழு

இந்த நிலையில் இந்திய மாணவர்களை மீண்டும் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாகவும், இதன் மூலம் இந்திய மாணவர்கள் அடங்கிய முதல் குழு விரைவில் சீனா வந்து விடுவார்கள் என்றும் சீனா அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், 'வெளிநாட்டு மாணவர்கள் சீனாவுக்கு திரும்புவதற்கு நாங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். இந்திய மாணவர்களை திரும்ப சேர்த்துக்கொள்வதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது' என்று தெரிவித்தார்.

விமான போக்குவரத்து

இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனக்கூறிய அவர், சீனா தற்போது தங்கள் கல்லூரிகளில் மீண்டும் சேர்வதற்காக நாடு திரும்ப விரும்பும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

படிப்புக்காக உடனடியாக சீனா திரும்ப விரும்பும் மாணவர்களின் பட்டியலை சீனாவுக்கு இந்தியா வழங்கி விட்டதாக மத்திய அரசு ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கொரோனா காரணமாக இந்தியா-சீனா இடையே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் தொடங்கி விட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்