விமானப்படை தளங்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷிய விமான நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல் உக்ரைன் மீது குற்றச்சாட்டு
|ரஷியாவின் 2 விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக நேற்று ரஷிய விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
கீவ்,
ரஷியாவின் 2 விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக நேற்று ரஷிய விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 10 மாதங்களாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் இருதரப்பும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.
ஆனால் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இருநாடுகளும் செயல்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷியா மற்றும் கிரீமிய தீபகற்பத்தை இணைக்கும் முக்கிய மேம்பாலத்தில் லாரி மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷியா தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள மின்நிலையங்கள் உள்பட பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ரஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் சரடோவ் மற்றும் ரியாசான் பிராந்தியங்களில் உள்ள 2 விமானப்படை தளங்களில் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ரஷிய வீரர்கள் 3 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். 2 விமானங்கள் சேதமடைந்தன.
இந்த 2 விமானப்படை தளங்களிலும் உக்ரைன் மீது குண்டுகள் வீசுவதற்காக ரஷியா பயன்படுத்தி வரும் போர் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
போா்முனைக்கு மிகத் தொலைவில், ரஷிய எல்லைக்குள் நடந்துள்ள இந்த டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என ரஷிய குற்றம் சாட்டியது. மேலும் இதற்கு பதிலடி தரும் விதமாக உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷியா தாக்குதல்களை அதிகரித்தது.
இந்த நிலையில் ரஷியாவின் தெற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒரு விமானநிலையத்தில் நேற்று காலை டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி மீது டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டதாகவும், அதில் விமான நிலையத்தில் பெரிய அளவில் தீப்பற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த டிரோன் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடி தகவல்கள் இல்லை.
அதே வேளையில் விமான நிலையம் மீதான டிரோன் தாக்குதலையும் உக்ரைனே நடத்தியிருக்கும் என ரஷியா குற்றம் சாட்டி இருக்கிறது. இது குறித்து உக்ரைன் தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.