எகிப்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் திடீர் தீ விபத்து; 41 பேர் உயிரிழப்பு
|எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கெய்ரோ,
எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடமேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்நிலையில், திடீரென இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை. இதனை தொடர்ந்து, அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கி விடப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என அதிபர் அப்துல் பதா அல்-சிசி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
இதன்பின் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மொத்தம் 10.3 கோடி மக்கள் தொகை கொண்ட முஸ்லிம்கள் அதிகம் வாழும் எகிப்தில் 1 கோடி எண்ணிக்கையில் காப்டிக் இன கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் சிசி, காப்டிக் இன கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்து கொள்வார். சமீபத்தில் அரசியல் சாசன கோர்ட்டின் நீதிபதியாக காப்டிக் இனத்தில் உள்ள ஒருவரை சிசி, பணி நியமனம் செய்துள்ளார்.
2013-ம் ஆண்டில் அதிபர் பதவியில் இருந்து முகமது மோர்சி தூக்கி எறியப்பட்டு, அப்துல் சிசி பதவியேற்றது முதல் கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகள் பற்றி எரிந்து வருகின்றன. இஸ்லாமியர்களால் காப்ட் கிறிஸ்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முஸ்லிம்களால் தாக்கப்படுகின்றனர். அதிக வேற்றுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்ற புகாரும் காணப்படுகிறது.
சமீப ஆண்டுகளாக எகிப்தில் பல்வேறு தீ விபத்துகள் ஏற்படுகின்றன. 2021-ம் ஆண்டு மார்ச்சில் கெய்ரோ கிழக்கு புறநகரில் துணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 2020-ம் ஆண்டு, கொரோனா நோயாளிகள் 14 பேர் இரண்டு மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.