பிரேசிலில் நிலமற்ற தொழிலாளர்கள் இயக்க முகாமில் தீ விபத்து: 9 பேர் பலி
|மின் கேபிள்களில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமில் உள்ள சில குடிசைகள் எரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
சோவ் பவுலோ,
பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கம் எம்.ஏஸ்.டிக்கு சொந்தமான ஒரு முகாமில் நேற்று முன் தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்
பாராவ்பிபாஸ் நகரில் அமைந்துள்ள கிராமப்புற விவசாயிகள் முகாமில் இணைய வயரிங் நிறுவும் போது மின் வலையமைப்பில் ஏற்பட்ட ஒரு சிக்கல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இரவு 8 மணியளவில் இந்த மின்கசிவு ஏற்பட்டதாக சமூக தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
முன்னதாக பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது ஆண்டெனா ஒன்று உயர் மின்னழுத்த நெட்வொர்க்கைத் உரசியபோது, மின் கேபிள்களில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமில் உள்ள சில குடிசைகள் எரிந்தன. இந்த சம்பவத்தில் இறந்த ஒன்பது பேரில், ஆறு பேர் முகாமில் வசிப்பவர்கள் மற்றும் மூன்று பேர் இணைய நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் ஒருவர் இரண்டாம் நிலை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார், ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.