அதிகரிக்கும் பதற்றம்: பற்றி எரிந்த அணுமின்நிலையம்... ரஷியா, உக்ரைன் பரஸ்பர குற்றச்சாட்டு
|முதன் முறையாக உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த துவங்கி உள்ளது.
கீவ்,
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அவை ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. இதன் மூலம் போரில் உக்ரைன் இன்னும் தாக்குப்பிடித்து நிற்கிறது.
அதேசமயம் போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. அதற்கு மாறாக அவ்வப்போது இரு நாடுகளும் தீவிர தாக்குதலில் ஈடுபடுகின்றன. இந்த சூழலில் முதன் முறையாக உக்ரைன் படைகள் நேற்று ரஷியாவுக்குள் நுழைந்தன. அங்குள்ள கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் 76 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதேசமயம் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறுவதை தடுக்க ரஷியா தனது ராணுவத்தை குவித்து வருகிறது.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதை அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். மேலும் ரஷியாவுக்கு எதிரான போரில் இது மிகப்பெரிய வெற்றி என்றும் தெரிவித்திருந்தார். அதேசமயம் உக்ரைனின் இந்த நடவடிக்கை மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என ரஷிய அதிபர் புதின் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் ரஷிய ராணுவ வீரர்கள் கைப்பற்றி இருந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய உக்ரைனின் ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையத்தை அழிக்க திட்டமிட்டு, ரஷிய வீரர்கள் அதற்கு தீ வைத்தனர். இதனால் கரும்புகை எழுந்து அணுவீச்சு தாக்கும் அபாயம் ஏற்பட்டது. இது மாதிரியான தாக்குதலை ரஷியா தவிர்க்க வேண்டும் என உக்ரைன் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷியாவும் பரஸ்பர குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் ரஷியா-உக்ரைன் போரில் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.