< Back
உலக செய்திகள்
கால்பந்து மைதானத்தில் 125 பேர் பலியான சம்பவம்: குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணை குழு - இந்தோனேசிய அரசு உத்தரவு
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் 125 பேர் பலியான சம்பவம்: குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணை குழு - இந்தோனேசிய அரசு உத்தரவு

தினத்தந்தி
|
3 Oct 2022 11:44 AM IST

மலாங் நகரின் கால்பந்து மைதானத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 323 பேர் காயமடைந்தனர்.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் மலாங் நகரில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை கால்பந்து போட்டி நடந்தது.

இதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா அணிகள் களம் கண்டன. கால்பந்து போட்டியை காண சுமார் 42 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.அவர்கள் அனைவருமே அரேமேனியாக்கள் என்று அழைக்கப்படும் அரேமா கால்பந்து அணியில் ரசிகர்கள் ஆவர்.

இந்த நிலையில் போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள், கடும் கோபமடைந்தனர்.

அதைத்தொடர்ந்து, ஆடுகளத்தில் இருந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் கால்பந்து அதிகாரிகள் மீது ரசிகர்கள் பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை வீசி எறிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆடுகளத்துக்குள் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வன்முறையாளர்களை விரட்டி அடிக்க மைதானத்துக்குள் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர்.கண்ணீர் புகையில் இருந்து தப்பிக்க பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக மைதானத்தை விட்டு வெளியேறும் பாதையை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

இதில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் கூட்டத்தினரின் கால்களில் மிதிப்பட்டு நசுங்கினர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலர் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.இன்னும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இப்படி இந்த துயர சம்பவத்தில் இதுவரை 174 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு தரப்பில் கூறுகையில் 125 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 323 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் கால்பந்து வரலாற்றில் மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. சர்வதேச கால்பந்து அமைப்பின் பிபா தலைவர் கியானி இன்பான்டினோ, இந்த சோக சம்பவத்தை கால்பந்தின் "இருண்ட நாள்" என்று கவலை தெரித்தார்

ஆயிரக்கணக்கானோர் நிரம்பியிருந்த மைதானத்தின் ஆடுகளத்தில் புகுந்த ரசிகர்களை தடுக்க அதிகாரிகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதே பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இதனால் இத்தனை பேர் உயிரிழக்க காரணமாக கூறப்படுகிறது.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்தோனேசியாவின் பல பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக அறிவித்தார்.அதிகாரிகளுக்கு எதிரான கோபம் சமூக வலைதளங்களிலும் வெளிப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தோனேசியாவின் தலைமை பாதுகாப்பு மந்திரி மகுபுத் எம்.டி கூறுகையில், "குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடுத்த சில நாட்களுக்குள் கண்டுபிடிக்குமாறு தேசிய காவல்துறையிடம் கேட்டுக் கொண்டோம். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை வெளிக்கொணருமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டோம். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விசாரணைக்கு ஒரு தனிப்படை அமைக்கப்பட உள்ளது. விசாரணை குழுவில் அரசு அதிகாரிகள், ஆய்வாளர்கள், அமைச்சக பிரதிநிதிகள், கால்பந்து அமைப்பு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் ஊடக உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பார்கள்" என்று தெரிவித்தார்.

மைதானத்தின் வரையறுக்கப்பட்ட பகுதியில் கண்ணீர்ப்புகைப் உபயோகம் செய்ததற்கு அதிகாரிகள் தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்