ஹமாசுடனான போர் " ஒளிக்கும், இருளுக்கும்" இடையிலான யுத்தம் - இஸ்ரேல் பிரதமர்
|ஹமாசுடனான போர் “ ஒளிக்கும், இருளுக்கும்” இடையிலான யுத்தம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம்,
ஹமாசுக்கு எதிராக நடைபெற்று வரும் போர், மனிதகுலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் "ஒளியின் சக்திகளுக்கும்", விலங்குகளை உள்ளடக்கிய "இருளின் சக்திகளுக்கும்" இடையேயான யுத்தம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "75 ஆண்டுகள் கடந்தும் கூட, சுதந்திரப் போர் முடிவடையவில்லை. ஹமாஸ் மீது வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,, "ஹமாஸை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட வேண்டும். இந்தப் போர் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குமான போரும் கூட. இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஏனெனில் இது இந்த பிராந்தியத்தில் எங்களின் இருப்பைப் பற்றியது.
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தின் ஒரு பகுதிதான் ஹமாஸ். இவர்கள் மத்திய கிழக்கு பகுதிகளை படுகுழியில் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இப்போது, இஸ்ரேல் யாரை எதிர்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள பலர் புரிந்துகொண்டிருப்பார்கள். ஹமாஸ் நாஜிக்களின் புதிய வெர்ஷன். நாஜிக்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்சை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட்டது போல, ஹமாஸை தோற்கடிக்கவும் ஒன்றுபட வேண்டும். ஈரானும், ஹிஸ்புல்லாவும் எங்களை சோதனை செய்து பார்க்க வேண்டாம். அப்படி செய்தால் இந்த முறை நீங்கள் செலுத்தும் விலை மிக அதிகமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.