கிரிப்டோகரன்சியை வாங்க திட்டமிட்டுள்ள பெராரி நிறுவனம்
|அமெரிக்காவில் கார்களை விற்பதற்கு கிரிப்டோகரன்சியை வாங்க பெராரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மிலன்,
இத்தாலி நாட்டின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமாக பெராரி உள்ளது. சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பர கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் பெராரி கார்களை விற்க கிரிப்டோகரன்சி என்னும் டிஜிட்டல் பணத்தை பெறும் முறையை அந்த நிறுவனம் அமல்படுத்தி உள்ளது.
பிட்காயின், டோகிகாய்ன் போன்ற டிஜிட்டல் பணங்களின் நிலையில்லா தன்மை காரணமாக பெரும்பலான நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. இருப்பினும் ஈக்வடார் போன்ற நாடுகளில் இந்த டிஜிட்டல் பணங்களை அரசு வங்கிகளே அறிமுகம் செய்து வைத்து ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளன.
இதுகுறித்து பெராரி நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் வணிக அதிகாரி என்ரிகோ கல்லிரா கூறியதாவது, "கிரிப்டோகரன்சிகள் போன்ற டிஜிட்டல் பணங்களை பயன்படுத்துவதன் மூலம் பூமி மாசுப்பாடு குறைந்து கரிம அடித்தடம் என்னும் 'கார்பன் புட்பிரிண்ட்' குறையும்" என்றார். முதற்கட்டமாக அமெரிக்காவில் இந்தமுறையை அறிமுகம் செய்துள்ள அந்தநிறுவனம் கூடியவிரைவில் ஐரோப்பாவில் தொடங்கும் என கூறப்படுகிறது. முன்னதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது கார்களை வாங்க கிரிப்டோகரன்சிகளை செலுத்தலாம் என கூறியது நினைவுக்கூரத்தக்கது.