மாலத்தீவில் அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக பெண் மந்திரி கைது
|மாலத்தீவு சட்டத்தின்படி பில்லி சூனியம் வைப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
மாலே,
அண்டை நாடான மாலத்தீவின் சுற்றுலா துறை மந்திரி பாத்திமா ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ் அதிபர் மாளிகையில் மந்திரிக்கு இணையான பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் அதிபர் முகமது மொய்சுவுக்கு பாத்திமா பில்லி சூனியம் வைத்ததாக அவர் மீது புகார் கூறி அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் அங்கு தீவிர சோதனைநடத்தினர். அப்போது சந்தேகத்துக்குரிய பல பொருட்கள் அங்கு கண்டறியப்பட்டன. அவற்றை கைப்பற்றிய போலீசார் பாத்திமா ஷாம்னாஸ், ஆதம் ரமீஸ் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே பாத்திமா ஷாம்னாஸ், ஆதம் ரமீஸ் ஆகியோரை பதவி நீக்கம் செய்து அதிபர் மாளிகை உத்தரவிட்டது. மாலத்தீவு சட்டத்தின்படி பில்லி சூனியம் வைப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எனவே அவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக பெண் மந்திரி கைது செய்யப்பட்ட சம்பவம் மாலத்தீவு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.