அமெரிக்காவில் வீட்டில் பெண் நீதிபதி, கணவர் மர்ம மரணம்
|அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் செல்ல பிராணிகளுடன் சேர்ந்து பெண் நீதிபதி மற்றும் அவரது கணவர் வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்தனர்.
நியூ மெக்சிகோ,
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் பெர்னாலில்லோ கவுன்டி பகுதிக்கு உட்பட்ட ஆல்புகுர்கு நகரில் ராஞ்சிடோஸ் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்த பெண் நீதிபதி டையானே ஆல்பர்ட் (வயது 65). இவரது கணவர் எரிக் பின்கர்டன் (வயது 63).
இந்த நிலையில், திடீரென அவரது வீட்டில் டையானே, அவர் வளர்த்து வந்த பல செல்ல பிராணிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். டையானேவின் கணவரும் உயிரிழந்து கிடந்து உள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து, அதிர்ச்சி அடைந்த எரிக்கின் நண்பர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளார். சம்பவ பகுதிக்கு போலீசார் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணை அடிப்படையில், மனைவி மற்றும் வளர்ப்பு பிராணிகளை கணவர் எரிக் சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து இருக்க கூடும் என சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.
இதுதவிர, தற்போது வேறு தகவல் எதுவும் வெளியிடுவதற்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பெண் நீதிபதி மற்றும் அவரது கணவர் மர்ம மரணம் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.