லூசி விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் அசத்தும் குடும்ப புகைப்படம்: நாசா வெளியீடு
|விண்வெளியின் ஆழம் நிறைந்த பகுதிக்கு செல்வதற்கு முன் நாசாவின் லூசி விண்கலம் இதுவரை இல்லாத வகையில் பூமி மற்றும் நிலவு இடம் பெற்ற குடும்ப புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பி உள்ளது.
நியூயார்க்,
நாசா விண்வெளி அமைப்பு ஆனது, சூரியனை வட்ட பாதையில் சுற்றி வரும் குறுங்கோள்களின் பன்முக தன்மை, செயல்பாடுகள் மற்றும் சூரிய குடும்ப தோற்றம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை ஆராய லூசி என்ற பெயரிடப்பட்ட விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி வைத்து உள்ளது.
இந்த லூசி விண்கலம் பூமியை சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இதனால் புவியீர்ப்பு விசையை பயன்படுத்தி விண்கலத்தின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கப்படும்.
விண்கலம் பூமியை சுற்றி பயணித்து வருவதன் ஒரு பகுதியாக, பூமி மற்றும் நிலவு இரண்டும் ஒருசேர படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படம் எடுக்கும்போது, லூசி விண்கலம் பூமி மற்றும் நிலவு இரண்டையும் விட 14 லட்சம் கி.மீ. தொலைவில் இருந்துள்ளது.
இதனை நாசா விண்வெளி அமைப்பு தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளது. அதில், பூமி மற்றும் நிலவின் குடும்ப புகைப்படம். இன்னும் புகைப்படங்கள் வரவுள்ளன என தெரிவித்து உள்ளது. லூசி விண்கலம் தொடர்ந்து பயணித்து சிறுகோள்களை பற்றிய ஆய்வில் ஈடுபடவுள்ளது.
இதேபோன்று பூமியில் இருந்து 6.2 லட்சம் கி.மீ. தொலைவில் இருந்தபோது எடுத்த பூமியின் சற்று பெரியபுகைப்படம் ஒன்றையும் லூசி விண்கலம் அனுப்பி உள்ளது.
அதுபற்றி நாசா தெரிவித்து உள்ள செய்தியில், அந்த புகைப்படத்தில், இடது மேல் புறத்தில் எத்தியோப்பியா நாட்டின் ஹடார் என்ற பகுதி இடம் பெற்று உள்ளது. அந்த பகுதியானது, 32 லட்சம் ஆண்டுகள் பழமையான மனித மூதாதையர்களின் புதைபொருள் அமைந்த பகுதி என நாசா அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்த புகைப்படங்களை எடுக்க டெர்மினல் டிராக்கிங் கேமிராவை லூசி விண்கலம் பயன்படுத்தி உள்ளது. இந்த கேமிராக்கள், விண்வெளியில் லூசி விண்கலத்தின் அதிவேக பயணத்தின்போது, குறுங்கோள்களின் செயல்பாடுகளை படம்பிடிக்கும் பணியை மேற்கொள்ளும்.
12 ஆண்டு கால பயணத்தில், குறுங்கோள்களை ஆய்வு செய்வதுடன், நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் பற்றிய சிறந்த புரிதலுக்கான தகவல்களையும் தேடும் பணியில் இந்த லூசி விண்கலம் ஈடுபடும்.