குவைத்: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழப்பு
|ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குவைத்,
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல் (வயது40). இவரது மனைவி லினி ஆபிரகாம் (38). இவர்களது குழந்தைகள் இரின் (14), இசாக் (9). மேத்யூஸ் மற்றும் அவரது மனைவி குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தனர். இதனால் மேத்யூஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குவைத் அம்பாசியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
மேத்யூஸ் ராய்ட்டர்சில் உள்ள நிறுவனத்திலும், அவரது மனைவி லினி அல் அஹ்மதி கவர்னரேட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றினர். அவர்களது குழந்தைகள் குவைத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். விடுமுறை கிடைக்கும் போது கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு மேத்யூஸ் தனது குடும்பத்தினருடன் வந்து செல்வது வழக்கம். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்திருக்கிறார். பின்பு விடுமுறை முடிந்ததையடுத்து குவைத்துக்கு திரும்பினர்.
இந்த நிலையில், நேற்று இரவு மேத்யூஸ் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.