புற்றுநோயுடன் போராடும் பீலே- ஆஸ்பத்திரியில் குவிந்த குடும்பத்தினர்
|பிரேசில் கால்பந்து ஜாம்பவானான பீலே, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
சாவ் பாலோ,
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் 82 வயதான பீலே உடல்நலக்குறைவால் பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சு திணறலால் அவதிப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே பெருங்குடலில் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதன் தாக்கமும் குறையாமல் உடலில் சில பாகங்களுக்கு பரவியுள்ளது. சிறுநீரம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும் உள்ளன. இதனால் அவரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்து மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை சார்பில் சமீபத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டாக்டர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் சாவ் பாலோ ஆஸ்பத்திரியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பீலே உடன் நேரத்தை செலவிடுவதற்காக அங்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையே, படுத்தநிலையில் உள்ள தனது தந்தையை மார்போடு அணைத்தபடி அவரது மகள் கெலி நசிமென்டோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுபூர்வமான புகைப்படம் என்றை வெளியிட்டுள்ளார். அதில் 'போராட்டத்திலும், நம்பிக்கையிலும், நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம். மற்றொரு இரவில் ஒன்றிணைந்துள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.