ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு
|ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோ,
ரஷியாவின் தென்கிழக்கு பகுதியில் சகலின் தீவில் உள்ள திமோவ்ஸ்கோய் நகரில் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. 1980-ல் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணிகளில் இறங்கினர்.
எனினும் இந்த விபத்தில் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவர். மேலும் டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.