< Back
உலக செய்திகள்
சீனாவில் கொரோனா ருத்ர தாண்டவம்: எங்களுக்கு உயிர் தான் முக்கியம்... இந்திய மருந்துகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்க துடிக்கும் சீன மக்கள்... !
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா ருத்ர தாண்டவம்: எங்களுக்கு உயிர் தான் முக்கியம்... இந்திய மருந்துகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்க துடிக்கும் சீன மக்கள்... !

தினத்தந்தி
|
29 Dec 2022 6:19 PM IST

சீனா முழுவதும் வைரஸ் காய்ச்சல் இருப்பவர்களுக்கு சாதாரண இருமல் மருந்துகள் மட்டுமே மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

பீஜிங்,

சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகமாகி கொண்டே இருக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா எழுச்சிக்கு ஒமைக்ரானின் பி.எப்.7 என்ற வைரஸ் பரவல்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு உள்ளாவதாகவும், 5 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சீன மருத்துவமனைகள் ஒருபுறம் நோயாகளாலும், மறுபுறம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களாலும் நிரம்பி வருகின்றன. கடந்த 2 வாரங்களாக 24 மணிநேரமும் சீனாவில் உள்ள சுடுகாடுகள் சடலங்களை எரியூட்டி வருவதாக அமெரிக்க ஊடங்கள் படங்களுடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்தநிலையில், பைசர் நிறுவனத்தின் பாக்லோவிட், அஸ்வுடின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மட்டுமே சீனா அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதுவும், அந்த இரண்டு மருந்துகளும் சில மருத்துவமனைகளில் மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா மருந்துகள் தீர்ந்துவிட்டதால், தற்போதுசீனா முழுவதும் வைரஸ் காய்ச்சல் இருப்பவர்களுக்கு சாதாரண இருமல் மருந்துகள் மட்டுமே மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவும், அந்நாட்டில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவிலும் கொரோனோ பரவல் அதிகரித்திருப்பதால், அந்நாடும் மற்ற நாடுகளுக்கு விநியோகித்து வந்த மருந்துகளை கணிசமாக நிறுத்திவிட்டது.

இந்த நிலையில், மருந்துகளின் தேவை அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவில் இருந்து மலிவான விலையில் கொரோனா ஜெனரிக் மருந்துகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்ய பெரும்பாலான சீனர்கள் விரும்புவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் தேவை அதிகரித்துள்ளதால், பிரிமோவிர், பக்ஸிஸ்டா, மொல்நுவன்ட், மோல்நட்ரிஸ் ஆகிய நான்கு கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவிலிருந்து சீன சந்தைகளில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கொரோனா ஜெனரிக் தடுப்பு மருந்துஒரு பெட்டி 1,000 யுவானுக்கு(ரூ.11,870) விற்பனை செய்யப்படுவதாக சீன சமூக வலைதள வெய்போவில் வெளியான செய்தி தற்போது அங்கு வைரலாகி உள்ளது. இந்த மருந்துகள் உடனடியாக காய்ச்சல், தலைவலியை குறைத்துவிடுவதால் சீன மக்கள் இந்த மருந்துகளை போட்டிப்போட்டு கொண்டு வாங்க வருகிறார்கள். இந்திய தயாரிப்பு மருந்துகளை எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் வாங்குவதற்கு, மக்கள் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா மருந்துகள் சீன அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அவற்றை விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் சீனா அரசு அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத வழிமுறைகளில் கொரோனா மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தை வரவழைக்கும். எனவே, கள்ள சந்தையில் கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க வேண்டாம் என்று சீன சுகாதாரத் துறை கூறியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்