ரஷியாவிலிருந்து ஐரோப்பா செல்லும் எரிவாயு குழாய்கள் வெடிவிபத்து; பின்னணியில் அமெரிக்கா?
|ரஷியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் எரிவாயு குழாய்களில் வெடிவிபத்து ஏற்பட்டு கசிவு ஏற்பட்டது.
வாஷிங்டன்,
ஐரோப்பிய நாடுகள் ரஷியாவில் இருந்து பெறும் எரிவாயுவை நம்பியே உள்ளன. ரஷியாவில் இருந்து பால்டிக் கடலுக்கு அடியில் குழாய் மூலம் எரிவாயு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. ஜெர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாயு பின்னர் அங்கிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
'நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2' ஆகிய இரண்டு திட்டங்கள் மூலம் ரஷியாவில் இருந்து கடல் வழியாக மிகப்பெரிய குழாய் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்படுகிறது.
'நார்ட் ஸ்ட்ரீம் 1' திட்டத்தில் ஒரு குழாய் மூலம் எரிபொருள் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து 'நார்ட் ஸ்ட்ரீம் 1' குழாய் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் அனுப்புவதை ரஷியா நிறுத்தியது.
'நார்ட் ஸ்ட்ரீம் 2' திட்டத்தில் 2 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழாய்களும் 'நார்ட் ஸ்ட்ரீம் 1' குழாய் அமைத்துள்ள அருகிலேயே செல்கிறது.
'நார்ட் ஸ்ட்ரீம் 2' திட்டம் நிறைவடைந்தபோதும் அந்த 2 குழாய்கள் மூலம் ரஷியாவில் இருந்து ஜெர்மனிக்கு இதுவரை எரிவாயு அனுப்பப்படவில்லை. பணிகள் முழுவையாக நிறைவடைந்து கடந்த பிப்ரவரி மாதம் இந்த திட்டம் தொடங்குவதாக இருந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்த திட்டம் அமலுக்கு வரவில்லை.
ஆனாலும், நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய எரிவாயு குழாய்களில் எரிபொருள் நிரம்பிய நிலையிலேயே உள்ளது.
இதனிடையே, கடந்த மாதம் 26-ம் தேதி நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டது. பால்டிக் கடலில் டென்மார்க்-ஸ்வீடன் கடல்பரப்பில் அடுத்தடுத்து எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டது.
இந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எரிவாயு குழாய் கசிவில் ரஷியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்தது.
கடலுக்கு அடியில் செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஸ்வீடன் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மூலம் எரிவாயு குழாய்கள் தகர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய எரிவாயு குழாய்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
பால்டிக் கடலின் பொர்ஹொலம் தீவு பகுதியில் கடலுக்கு அடியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது என ஸ்வீடன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த சம்பவம் தான் பின்னர் கடலுக்கு அடியில் செல்லும் நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாயில் வெடிப்பு என்பது தெரியவந்தது.
26-ம் தேதி நள்ளிரவு சரியாக 12 மணி 3 நிமிடத்தில் எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்த நிலையில் அந்த சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடம் அருகே அமெரிக்காவின் விமானப்படை விமானம் பறந்து சென்றுள்ளது.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பி-8 ஏ என்ற உளவு விமானம் அந்த பகுதி அருகே பறந்து சென்றுள்ளது. இந்த தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் நடந்த சமயத்தில் அந்த இடத்திற்கு அருகே சுமார் 15 மைல் தொலைவில் அமெரிக்க விமானப்படை விமானம் பறந்து சென்றதற்கான தரவுகள் தற்போது கிடைத்துள்ளது.
இதன் மூலம் ரஷியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு கடலுக்கு அடியில் குழாய் மூலம் கொண்டு செல்லப்படும் எரிவாயு குழாய்களான நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 தொகுப்பின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந்த தாக்குதலுக்கு பின்னனியில் ரஷியா இருக்கலாம் என திசை திருப்ப முயற்சித்ததா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அதேவேளை, நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் கசிவுக்கும் உளவு விமான பயணத்திற்கும் சம்மந்தம் இல்லை என்றும் பால்டிக் கடலில் வழக்கமான உளவு பணிகளையே பி-8ஏ உளவு விமானம் கண்காணித்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் எரிவாயு குழாய்களில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவம் நடந்த சமயத்தில் வெடிவிபத்து நடந்த பகுதிக்கு அருகே அமெரிக்க விமானப்படை விமானம் பறந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகளிடையே சந்தேகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.