அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: முக்கிய குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை
|அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சி வேட்பாளருமான டிரம்ப் தோல்வி அடைந்தார்.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் வழங்குவதற்காக 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது.
5 பேர் பலி
அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றுத்துக்குள் புகுந்து சூறையாடினர். இந்த கலவரத்தில் 5 பேர் பலியாகினர்.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவமாக இது அமைந்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமாக மாறியது.
இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் அமெரிக்க நீதித்துறை இந்த வழக்கை விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்டனைகளை அறிவித்து வருகிறது.
பிரவுட் பாய்ஸ் அமைப்பு
இந்தநிலையில் கலவரத்திற்கு காரணமான 'பிரவுட் பாய்ஸ்' அமைப்பின் உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில் பலருக்கு 18 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அந்த அமைப்பின் முன்னாள் தலைவனான ஹென்றி என்ரிக் டாரியோ முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். நீதிபதி திமோதி ஜே.கெல்லி அவரிடம் விசாரணையை நடத்தி முடித்தார்.
22 ஆண்டுகள் சிறை
அதன்படி சம்பவம் நடந்த அன்று வாஷிங்டனுக்குள் நுழைய டாரியோவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வன்முறையை கட்டவிழ்க்கும் வகையில் ஆட்களை ஏற்பாடு செய்து தாக்குதலை அரங்கேற்ற மூளையாக அவர் செயல்பட்டது தெரியவந்தது. இதனால் டாரியோவுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக வழங்கப்பட்ட தண்டனைகளில் இதுவே அதிகபட்சமாகும்.