பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும்- இம்ரான் கான் கட்சி வலியுறுத்தல்
|தேர்தலில் மோசடி நடைபெற்றதாகவும், மக்கள் தங்களுக்கு அளித்த வெற்றியை திருடி புதிய அரசு அமைக்கப்பட்டிருப்பதாகவும் பி.டி.ஐ. கட்சி குற்றம்சாட்டுகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) சின்னமான பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர்.
சின்னம் இல்லாத நிலையிலும், சுயேட்சையாக போட்டியிட்ட பி.டி.ஐ. கட்சி வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால், அவர்களை விட குறைந்த இடங்களில் வென்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளன.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த பி.டி.ஐ. கட்சி, இந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாகவும், மக்கள் தங்களுக்கு அளித்த வெற்றியை திருடி புதிய அரசு அமைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறது. மக்கள் ஆணையை திருடிய அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தினார்.
இந்நிலையில், பி.டி.ஐ. கட்சியின் தேசிய சபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். பேரணிக்கு எதிர்க்கட்சி தலைவர் உமர் அயூப் தலைமை தாங்கினார். பேரணியில் பங்கேற்ற உறுப்பினர்கள், தேர்தல் ஆணையருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பாகிஸ்தானில் தேர்தல் மோசடியில் ஈடுபட்ட தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜா பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். சிறையில் உள்ள கட்சி தலைவர் இம்ரான் கானை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.
பேரணியின் தொடக்கத்தில் உமர் அயூப் பேசுகையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்துவது மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் ஒரே வேலை, ஆனால் அந்த கடமையை தேர்தல் ஆணையம் நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் கூறினார்.