காசா போரில் இந்தியர் பலி: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்
|காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா.வில் பணியாற்றி வந்த இந்தியர் கொல்லப்பட்டார்.
காசா,
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதோடு வெளிநாட்டினர் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழித்து, பணய கைதிகளை மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது.7 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில் காசா நகரம் சின்னாபின்னமாகி உள்ளது. அங்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
இது சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தி உள்ளதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென உலக நாடுகள் இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேலோ அதற்கு நேர் மாறாக நாளுக்கு நாள் போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் காசாவின் ரபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா.வில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு துறையில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த வைபவ் அனில் காலே (வயது 46) நேற்று முன்தினம் சக அதிகாரி ஒருவருடன் ரபா நகரில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வைபவ் அனில் காலே சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணித்த மற்றொரு அதிகாரி பலத்த காயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய ராணுவத்தில் இணைந்த வைபவ் அனில் காலே காஷ்மீரில் 11-வது ஜம்மு-காஷ்மீர் ரைபிள் படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு அவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்தான் அவர் ஐ.நா. பாதுகாப்புத்துறையில் இணைந்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக பொறுப்பேற்றார். அதைதொடர்ந்து அவர் காசாவில் மக்களுக்காக சேவையில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில்தான் ரபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். மேலும் அவர் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காசா போரில் ஐ.நா. பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியே குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு ஐ.நா. அழைப்பு விடுத்துள்ள நிலையில் சம்பவம் குறித்து இஸ்ரேல் தனி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.