சின்ன படையெடுப்பு என்றாலும்... இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை
|இஸ்ரேல் சிறிய அளவிலான படையெடுப்பில் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய அளவில் மற்றும் பயங்கர பதிலடி கிடைக்கப்பெறும் என்று ஈரான் அதிபர் ரெய்சி எச்சரித்துள்ளார்.
தெஹ்ரான்,
ஈரானின் தெஹ்ரான் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த அணிவகுப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் நீண்டதொலைவு சென்று தாக்க கூடிய பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவ சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதிகள், உயரதிகாரிகள் மற்றும் வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எனினும், இதனை ஈரானின் அரசு தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பு செய்யவில்லை. இதனை பார்வையிட்ட பின்னர் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி வீரர்கள் இடையே உரையாற்றினார்.
அப்போது அவர் கூறும்போது, சிறிய அளவிலான படையெடுப்பில் இஸ்ரேல் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய அளவில் மற்றும் பயங்கர பதிலடி கிடைக்கப்பெறும் என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்த வெற்றியை ஈரான் கொண்டாடியது. எனினும், இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க கூடும் என பரபரப்பாக பார்க்கப்படுகிறது. ஈரானுக்கு எதிராக சில ஐரோப்பிய நாடுகள், தடைகளை விதிக்க முன்வந்துள்ளன. அமெரிக்காவும் தடை நடவடிக்கையை முன்வைத்துள்ளது.
ஈரான் தாக்குதலில் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி ஐரோப்பிய நாடுகள் கேட்டு கொண்டன. இதேபோன்று, இஸ்ரேலின் கூட்டணி நாடுகளும் நெதன்யாகுவிடம் தாக்குதலை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஆனால், கூட்டணி அரசுகளின் கோரிக்கை ஒருபுறம் இருந்தபோதும், தற்காப்புக்காக இஸ்ரேல் தன்னுடைய சுய முடிவை எடுக்கும் என்று நெதன்யாகு கூறியுள்ளார். இதனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் கடந்த 1-ந்தேதி தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு கடந்த சனிக்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்தது.
ஈரானின் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இந்த சூழலில், இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து கொள்ள வேண்டும் என்று ஈரான் சமீபத்தில் எச்சரித்தது. இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்தது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் எங்களுடைய தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியே நாங்கள் தொடுத்த தாக்குதல் ஆகும் என ஈரான் தெரிவித்து இருந்தது. 2 ராணுவ உயரதிகாரிகள் உள்பட ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படையினர் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின், தற்காப்புக்கான நடவடிக்கையாகவே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என ஈரான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளது.