< Back
உலக செய்திகள்
ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் - இமானுவேல் மேக்ரான்
உலக செய்திகள்

'ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும்' - இமானுவேல் மேக்ரான்

தினத்தந்தி
|
20 Jun 2023 3:12 PM IST

ஐரோப்பிய நாடுகளுக்கு வான்வெளி பாதுகாப்பில் சுயசார்பு தேவை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறினார்.

பாரிஸ்,

விமானம் மற்றும் விண்வெளித்துறையை மையமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய நிகழ்வான பாரிஸ் ஏர் ஷோவின் துணை நிகழ்ச்சியாக ஒரு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 20 ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகள் மற்றும் பிற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற நாடுகளில் ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் சுவீடன் நாடுகளுடன் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் ருமேனியா ஆகியவையும் அடங்கும். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

"ஐரோப்பிய நாடுகளுக்கு வான்வெளி பாதுகாப்பில் சுயசார்பு தேவை. பாதுகாப்பு தளவாடங்களிற்காக அமெரிக்காவையே அதிகம் நம்பியிருப்பது தவறு. ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும். நமக்கு இருக்கும் அச்சுறுத்தல் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், ஐரோப்பியர்களாகிய நாம் எதை உருவாக்க முடியும், நாம் என்ன வாங்க வேண்டும் எனவும் சிந்திக்க வேண்டும்.

அலமாரிகளில் (விற்பனைக்கு) என்ன இருக்கிறதோ உடனடியாக அதை வாங்குவது தவறு. ஐரோப்பிய பாதுகாப்பு உபகரண உற்பத்தியாளர்கள் சுயாதீன ராணுவ அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஐரோப்பிய தரம் மிக முக்கியம். அமெரிக்கர்களிடமிருந்து நாம் அதிகமாக வாங்க வேண்டியிருப்பதற்கு காரணம், அவர்கள் தரத்தை மிகவும் மேம்படுத்தியிருக்கிறார்கள். மேலும் அவர்களே தங்கள் உற்பத்தியாளர்களுக்கு மானியங்களை வழங்கும் ஃபெடரல் ஏஜென்சிகளை வைத்திருக்கிறார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்