ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் அபாயம் அதிகம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
|ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் அபாயம் அதிகம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மாஸ்கோ,
உலக சுகாதார அமைப்பின் தலைவர் மெலிடா உஜ்னோவிக், ரஷிய செய்தி ஊடகம் ஸ்புட்னிக்கிடம் பேசும்போது, மண்டல அளவில், உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி, ஐரோப்பிய பகுதியில் குரங்கு அம்மை பரவ கூடிய ஆபத்து அதிகம் உள்ளது.
அனைத்து நாடுகளும் புதிய பாதிப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர்பில் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும். அதன் அதிவேக பரவலை தடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் கனடாவில் அதிக அளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள எட்டு நாடுகளில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் ஆகிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இதன் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நோய் பாதிப்பு பெருமளவில் எலிகள் போன்ற வன விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றில் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடும் என கூறப்படுகிறது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை காணப்படும். இதுதவிர மருத்துவ சிக்கலான நிலைக்கும் கொண்டு செல்ல கூடும். இதன் பாதிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மே மாதம் தொடங்கிய இந்த பரவலானது, கடந்த மே 13ந்தேதி முதல் ஜூலை 1ந்தேதி வரையில் மனிதர்களில் 51 நாடுகளில் 5,100 பேருக்கு பதிவாகி உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.