எரிவாயு நுகர்வை 15% குறைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு
|எரிவாயு இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்து இருப்பதை குறைக்க ஐரோப்பிய ஒன்றைய கவுன்சில் முடிவு செய்துள்ளது.
பிரசல்ஸ்,
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை அங்கு போர் நடைபெற்று வரும் நிலையில், தாக்குதலை தொடங்கிய ரஷியாவின் மீது பல்வேறு உலக நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷியாவையே நம்பி இருக்க வேண்டியதாக உள்ளது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் 40 சதவீத இயற்கை எரிவாயு, 30 சதவீத எண்ணெய் மற்றும் சுமார் 20 சதவீத நிலக்கரி ரஷியாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஆனாலும் இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில், வரும் குளிர்காலத்தில் இயற்கை எரிவாயு நுகர்வை 15 சதவீதம் குறைக்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யவும் உடன்படிக்கை ஒன்றை அமல்படுத்தியுள்ளது.
இந்த உடன்படிக்கையின்படி, உறுப்பு நாடுகள் எரிவாயு நுகர்வில் 15 சதவீதத்தை குறைக்க வேண்டும் என்றும், இதனை இந்த ஆகஸ்ட் மாதம் முதல் 2023 மார்ச் காலகட்டத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள அந்தந்த நாடுகளே தேர்வு செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்து இருப்பதை முடிவுக்கு கொண்டு வர இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தெரிவித்துள்ளது.