< Back
உலக செய்திகள்
இங்கிலாந்தும், நானும் உங்களுக்கு துணை நிற்கிறோம்:  இஸ்ரேலில் ரிஷி சுனக் பேட்டி
உலக செய்திகள்

இங்கிலாந்தும், நானும் உங்களுக்கு துணை நிற்கிறோம்: இஸ்ரேலில் ரிஷி சுனக் பேட்டி

தினத்தந்தி
|
19 Oct 2023 2:44 PM IST

இங்கிலாந்தும், நானும் உங்களுக்கு துணை நிற்கிறோம் என இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் ரிஷி சுனக் பேட்டியில் கூறியுள்ளார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் பணய கைதிகளை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் கப்பல் உள்பட ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர். தொடர்ந்து 13-வது நாளாக மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் நாட்டுக்கு இன்று சென்றார். அவரை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் ஆகியோர் வரவேற்றனர்.

சுனக் இஸ்ரேலில் சென்று இறங்கியதும் செய்தியாளர்களிடம் பேசும்போது, காலை வணக்கம். இந்த முக்கிய தருணத்தில் இஸ்ரேலில் நான் இருப்பதற்காக மனநிறைவடைகிறேன்.

அவை எல்லாவற்றையும் விட, இஸ்ரேல் மக்களுக்கான என்னுடைய ஆதரவை வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பேச முடியாத, பயங்கரவாதத்தின் பயங்கர செயலால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள்.

இங்கிலாந்தும், நானும் உங்களுக்கு துணை நிற்கிறோம் என்று உங்களுக்கு நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். இஸ்ரேல் பிரதமர் மற்றும் அதிபருடன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த காத்திருக்கிறேன்.

அவை ஆக்கப்பூர்வ சந்திப்புகளாக இருக்க கூடும் என நான் அதிகம் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். துயரத்தில் உள்ள நாட்டில் நான் இருக்கிறேன். உங்களுடன் நானும் துயரில் இருக்கிறேன்.

பயங்கரவாதம் என்ற தீங்கிற்கு எதிராக உங்களுடன் நான் துணையாக நிற்கிறேன். இப்போதும் மற்றும் எப்போதும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் ஆண்ட்ரூஸ் படை தளத்தில் இருந்து, தனி விமானத்தில் புறப்பட்டு, போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு நேற்று சென்றார்.

இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படையாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என கூறினார். ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக இல்லை என்றும் கூறினார்.

காசா பகுதி மக்களுக்கு உதவி தேவையாக உள்ளது என்று கூறிய பைடன், காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு விசாரணையை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்