இங்கிலாந்து: வாரத்திற்கு 250 நோயாளிகள் மரணம்... அதிர்ச்சியான காரணம் வெளியீடு
|இங்கிலாந்தில், நீண்டநேரம் சிகிச்சை கிடைக்காமல் வரிசையில் காத்திருந்ததில், கடந்த ஆண்டு வாரம் ஒன்றிற்கு, சராசரியாக 268 பேர் உயிரிழந்து உள்ளனர்.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி அவசரகால மருத்துவத்திற்கான ராயல் கல்லூரி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த விவரங்களை இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை துறை வெளியிட்டு உள்ளது. இதன்படி, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அந்த வார்டுக்கு வெளியே நீண்டநேரம் வரை வரிசையில் காத்திருந்து உள்ளனர். இப்படி காத்திருக்கும் நேரம் அதிகரித்தும், உரிய நேரத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமல் போயும், கடந்த ஆண்டில் எண்ணற்றோர் மரணம் அடைந்துள்ளனர்.
இதன்படி, நீண்டநேரம் சிகிச்சை கிடைக்காமல் காத்திருந்து, கடந்த ஆண்டு வாரம் ஒன்றிற்கு, சராசரியாக 268 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, நடப்பு ஆண்டு பிப்ரவரியில் மட்டுமே, இங்கிலாந்து மருத்துவமனைகளின் அவசரகால பிரிவில் 12 மணிநேரத்திற்கும் கூடுதலாக காத்திருந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரம் என தெரிய வந்துள்ளது. இது, கடந்த 2023-ம் ஆண்டில் 15 லட்சம் நோயாளிகள் என்ற அளவில் இருந்தது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.