< Back
உலக செய்திகள்
இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்
உலக செய்திகள்

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

தினத்தந்தி
|
13 July 2022 12:26 PM IST

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவு தப்பிச்சென்றுள்ளார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பியோடிய நிலையில் கொழும்பு பிரதமர் அலுவலகம் உள்ள பகுதியில் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் அதிரடிப்படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பிரதமர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகைகுண்டு வீசி கலைக்க போலீசார் முயற்சி செய்தனர்.

இந்நிலையில், இலங்கையில் மீண்டும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால், அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். போராட்டத்தால் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பிரதமர் இல்லத்திற்கு பலத்த ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்