< Back
உலக செய்திகள்
இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை: ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம்

கோப்புப்படம்

உலக செய்திகள்

இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை: ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம்

தினத்தந்தி
|
19 July 2022 1:29 AM GMT

நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கொழும்பு,

அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த போராட்டங்களால் தற்போது அரசியலில் புயல் வீசிவருகிறது.

எதிர்ப்புச் சூடு தாளாமல் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். ஆனால் அவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இலங்கையில் அவசரநிலையை பிறப்பிப்பதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் நேற்று காலை வெளியிட்டார்.

பொது பாதுகாப்பு கருதியும், பொது ஒழுங்கை பாதுகாக்கவும், மக்களுக்கான அத்தியாவசிய வினியோகம் மற்றும் சேவைகளை பராமரிக்கவும் அவசரநிலையை பிரகடனம் செய்வதாக ரணில் தெரிவித்துள்ளார்.

கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதால், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்நிலையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அவசரநிலையால், விருப்பம்போல் தனிநபர்கள், வளாகங்களை சோதனையிடவும், கைது, பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளவும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் போட்டியில் உள்ள ரணிலுக்கும் இது பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அவசரநிலை பிரகடனம், கொடூரமான, ஜனநாயக விரோத செயல்பாடு என்று எதிர்க்கட்சித் தலைவரும், சமாகி ஜன பலவேகய கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரனும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

போலீசுக்கு உத்தரவு, பாதுகாப்பு அதிகரிப்பு

அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனதா விமுக்தி பெருமுனா மார்க்சிஸ்ட் கட்சியின் அனுர குமார திசநாயக்கே, ஆளும் பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டல்லஸ் அலகபெருமா மற்றும் மேலும் இருவரும் போட்டியில் உள்ள நிலையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தலையொட்டி நாடாளுமன்ற எம்.பி.க்களை மிரட்டவும், தாக்கம் ஏற்படுத்தவும் முயல்பவர்களை கண்காணிக்கும்படி போலீசுக்கு இடைக்கால அதிபர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் இலங்கையில் போராட்டங்கள் வெடித்தபின் பலமுறை அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கோத்தபய நாட்டில் இருந்து தப்பியோடிய பின்பும் அவசரநிலையை ரணில் அறிவித்தார். ஆனால் அதற்கான உத்தரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்