அமெரிக்காவில் இந்திய நடன கலைஞர் சுட்டு கொலை; தூதரகம் விசாரணை
|போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
மிஸ்ஸவுரி,
அமெரிக்காவின் மிஸ்ஸவுரி மாகாணத்தில், செயின்ட் லூயிஸ் பகுதியில் அமர்நாத் கோஷ் என்ற நடன கலைஞர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் கொல்கத்தா நகரை சேர்ந்தவரான கோஷ், குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகிய கலைகளில் தேர்ந்தவர். அமெரிக்காவில் பிஎச்.டி. படிப்பை படித்து வந்துள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை மாலையில் அமர்நாத் கோஷ், செயின்ட் லூயிஸ் அகாடமியருகே மாலைநேர நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை பலமுறை தாக்க முற்பட்டு உள்ளார். இதில், துப்பாக்கியால் சுடப்பட்ட கோஷ் படுகாயமடைந்து உயிரிழந்து உள்ளார்.
கோஷின் சிறுவயதில், அவருடைய தந்தை உயிரிழந்து விட்டார். 3 ஆண்டுகளுக்கு முன்பு, அவருடைய தாயார் உயிரிழந்து உள்ளார். இதனால், ஒரே மகனான அவருடைய பெற்றோர் இருவரும் இல்லாத சூழலில், அவருடைய உடலை பெற்று இறுதி சடங்கு மேற்கொள்ள அமெரிக்காவில் உள்ள சில நண்பர்கள் முயன்று வருகின்றனர். ஆனால், அதுபற்றி மேற்கொண்டு எந்த விவரமும் தெரிய வரவில்லை.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தொலைக்காட்சி நடிகையான தேவோலீனா பட்டாச்சார்ஜி வலியுறுத்தி உள்ளார். இதற்காக, இந்திய தூதரகம் மற்றும் வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை தொடர்பு கொண்டு உள்ளார். அவருடைய படுகொலைக்கான காரணம் பற்றியாவது தெரிய வேண்டும் என்று பட்டாச்சார்ஜி வேண்டுகோளாக கேட்டுள்ளார்.
இதுபற்றி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில், 2024-ம் ஆண்டு முதல் 2 மாதங்களில் இந்திய மாணவர்கள் 5 பேர் தனித்தனியான தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்தியர்களின் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.