< Back
உலக செய்திகள்
இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் எலான் மஸ்க் திடீர் சீனா பயணம்
உலக செய்திகள்

இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் எலான் மஸ்க் திடீர் சீனா பயணம்

தினத்தந்தி
|
28 April 2024 4:51 PM IST

இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வாஷிங்டன்,

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவரது டெஸ்லா நிறுவனம் சா்வதேச அளவில் மின்சார வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. மேலும் பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க், அதன் பெயரை 'எக்ஸ்' என்று மாற்றினார். அதோடு 'ஸ்பேஸ் எக்ஸ்' விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த வாரம் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு மற்றும் 'ஸ்டார் லிங்' திட்டம் குறித்த அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பயணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டது.

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், "டெஸ்லா நிறுவனம் தொடர்பான முக்கிய சந்திப்பு இருப்பதால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு தற்போது வர முடியவில்லை. எனினும் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். மின்சார வாகன சந்தையில் உலகின் 2-வது மிகப்பெரிய நாடாக திகழும் சீனாவுக்கு எலான் மஸ்க் திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த பயணத்தின்போது தானியங்கி கார்களுக்கான (FSD) மென்பொருளை சீனாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக சீன அதிகாரிகளுடன் எலான் மஸ்க் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக 'எக்ஸ்' தளத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த எலான் மஸ்க், சீனாவில் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் தானியங்கி கார்கள் கிடைக்க டெஸ்லா வழிவகை செய்யும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்