நான் ஏலியன்தான்... நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த எலான் மஸ்க்
|நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த எலான் மஸ்க், நான் ஒரு ஏலியன்தான், ஆனால் யாரும் என்னை நம்பவில்லை என கூறினார்.
பாரிஸ்:
ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், பாரிசில் நடைபெற்ற விவா தொழிநுட்ப நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, அவரது தோற்றம் வேற்றுகிரகவாசி போன்று இருப்பதாக (ஏலியன்) சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிரித்துக்கொண்டே கிண்டலாக பதிலளித்த எலான் மஸ்க், "நான் ஒரு வேற்றுகிரகவாசிதான். இதை சொல்லிக்கொண்டே வருகிறேன். ஆனால் யாரும் என்னை நம்பவில்லை" என்றார்.
பூமியில் வேற்றுகிரகவாசிகள் பற்றி நடக்கும் விவாதம் குறித்து பேசிய அவர், "ஏலியன்கள் பூமியில் இருப்பதாக நினைக்கிறீர்களா என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். இதுவரை வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் நான் பார்க்கவில்லை. ஆதாரம் கிடைத்தால் அதை எக்ஸ் தளத்தில் வெளியிடுவேன்" என்றார்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான தனது நிறுவனத்தின் ஆய்வு மற்றும் தேடல் குறித்தும் எலான் மஸ்க் பேசினார்.
"மனிதர்கள் பல கிரகங்களில் வாழவேண்டும் என்பதே ஸ்பேஸ்எக்ஸ்சின் நீண்ட கால இலக்கு. நாம் ஒரு நிலையான பல கிரக நாகரிகமாக மாற வேண்டும். அவ்வாறு செய்வது சாத்தியமாகும்போது, பூமியின் வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும்" என்றார்.