நாசாவின் புகைப்படத்தை கிண்டல் செய்த எலான் மஸ்க்...
|‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்கள் ஆகியவை இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை உருவாக்கியுள்ளன. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த புகைப்படங்களை அண்மையில் நாசா வெளியிட்டது. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ரகசியங்களை அறிவதற்கான தேடலில், இந்த புகைப்படங்கள் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்கள் இந்த சாதனையை பாராட்டி வருகின்றனர்.
அதே சமயம் மீம் கிரியேட்டர்கள் பலர் இந்த புகைப்படங்களை பல்வேறு விஷயங்களுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தும் வருகின்றனர். அந்த வகையில், உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
நாசா வெளியிட்ட நட்சத்திர மண்டலத்தின் புகைப்படத்தை சமையல் அறையில் இருக்கும் டைல்ஸ் டிசைனுடன் ஒப்பிட்டு அவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் 'நல்ல முயற்சி நாசா' என்று கூறப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் இந்த பதிவு டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.