தேர்தல் முறைகேடு வழக்கு: விசாரணையில் இருந்து டிரம்ப் விலக்கு கோர முடியாது - அமெரிக்க கோர்ட்டு திட்டவட்டம்
|முன்னாள் ஜனாதிபதிக்கான எந்தவொரு அதிகாரமும் டிரம்ப் மீதான விசாரணையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்காது என கோர்ட்டு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்றதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்த தனக்கு, இந்த வழக்கின் விசாரணைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி டிரம்ப் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை நீதிபதி தான்யா சுட்கான் நிராகரித்தார். இதையடுத்து டிரம்ப் தரப்பில் வாஷிங்டன் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு வாஷிங்டன் கோர்ட்டில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த வழக்கைப் பொறுத்தவரை, முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஒரு சாதாரண குடிமகனுக்கான அதிகாரங்களுடன் விசாரிக்கப்படுவார். அவர் ஜனாதிபதியாக பணியாற்றியபோது அவருக்கு பாதுகாப்பு அளித்த எந்தவொரு அதிகாரமும் இந்த வழக்கு விசாரணையில் இருந்து அவருக்கு பாதுகாப்பு அளிக்காது" என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.