வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்திற்கு வருமான வரி கிடையாது.. எல் சால்வடார் அரசு சலுகை
|பணப்பரிமாற்றம், நிறுவனங்களில் முதலீடு போன்ற வடிவங்களில் வரும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
சான் சால்வடார்:
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் வகையில், வரிச்சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதிக அளவு அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தின் மீது விதிக்கப்பட்ட வருமான வரியை நீக்குவதற்கு இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
இந்த சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற்ததில் பேசிய எம்.பி.க்கள், வெளிநாடுகளில் இருந்து பணப்பரிமாற்றம், நிறுவனங்களில் முதலீடு போன்ற வடிவங்களில் வரும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்தனர்.
மசோதாவை ஆதரித்து சூசி செல்லஜாஸ் பேசும்போது, பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக உள்நாட்டு மற்றும் அன்னிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
இந்த சீர்திருத்தத்திற்கு முன்னதாக, வெளிநாடுகளில் இருந்து 150,000 டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானம் நாட்டிற்குள் நுழையும்போது 30 சதவீத வருமான வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்படத்தக்கது.