ஈகுவடார் நாட்டில் எல் நினோ பாதிப்பு; 60 நாட்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்
|ஈகுவடாரில், அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கடந்த ஜனவரியில் முதல் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
குவிட்டோ,
ஈகுவடார் நாட்டின் அதிபராக டேனியல் நொபோவா பதவி வகித்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பரில் அதிபராக பொறுப்பேற்று கொண்ட அவருடைய ஆட்சியில், கடந்த ஜனவரியில் முதல் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதில், ராணுவம் மற்றும் போலீசார் இடையே அதிக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, இந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2-வது முறையாக அந்நாட்டில் நெருக்கடி நிலையை நொபோவா அறிவித்து உள்ளார். ஈகுவடாரின் எரிசக்தி உட்கட்டமைப்பை பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ராணுவம் மற்றும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஈகுவடார் நாட்டில் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அடிப்படையாக உள்ள நீர்மின்சார உற்பத்தி அணைகள், எல் நினோ பருவநிலை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதனால், நாட்டில் வறட்சி நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, மக்கள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் நெருக்கடி நிலையை அறிவித்து உள்ளார்.